Friday, February 1, 2008

வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி-2008










நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு நிகழ்வும் 1-2-2008 அன்று பாடசாலை மைதானத்தில் அதிபர் எஸ்.பி.எல். பீரிஸ் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப போட்டி நிகழ்ச்சிகள் ஜனவரி மாதம் 28 ,29,30 ஆம் திகதிகளில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. போட்டி ஆரம்பிப்பாளராக நீர்கொழும்பு, களனி கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் எம். இஸட். ஷாஜஹான் கடமையாற்றினார். அவருக்கு உதவியாக நீர்கொழும்பு, களனி கல்வி வலய கணித பாட ஆசிரிய ஆலோசகர் ஜெகநாதன் மற்றும் தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியால ஆசிரியர்கள் சிலரும் கடமையாற்றினர்.

கைதான், பத்திமா இல்லங்களுக்கிடையில் போட்டிகள் நடைபெற்றன.

Wednesday, January 23, 2008

போருதொட்ட பிரதேசத்தில் கடற்கரைப் பூங்காவும் கரப்பந்தாட்ட மைதானமும்

















நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தில் முப்பது இலட்சம் ரூபா செலவில் கடற்கரைப் பூங்காவும் கரப்பந்தாட்ட மைதானமும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 20-1-2008 அன்று போருதொட்ட கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றது.
சிவில் விமான சேவைகள் அமைச்சர் சரத்குமார குணரட்ன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேயர் நிமல்லான்ஸா, பிரதி மேயர் சேபால மொரவக்க , மாநகர சபை உறுப்பினர் பரீஸ் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tuesday, January 22, 2008

கடலுக்குச் சென்ற மீனவர்கள் மூவரை இதுவரை காணவில்லை









நீர்கொழும்பு கடற்பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மூவரை இதுவரை காணவில்லை.
12-12-2007 அன்று நீர்கொழும்பு குடாப்பாடு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற போதே காணாமல் போயுள்ளனர்.அன்றன் மிலான் தம்மிக (35 வயது), அன்றன் ஜஸ்டமணி (30 வயது), அன்ரனி சுரேஸ் (34 வயது) ஆகியோரே காணாமல் போன மீனவர்களாவர்.

இவர்கள் சென்ற படகை மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து படகு என்ஜின் செயலிலந்துள்ளது. இதை இன்னொரு படகில் சென்ற மீனவர்கள் 13-12-2007 அன்று கண்டு காப்பற்ற முயன்றுள்ளனர்.ஆயினும் புதிதாக வாங்கிய படகை விட்டுவர மனமின்றி மூன்று மீனவர்களும், கரைக்கிச் சென்று மற்ற மீனவர்களுக்கு தெரியப்படுத்துமாறு கூறியுள்ளனர்.
அதன்படி தேடிச் சென்றபோதே படகுடன் மீனவர்கள் காணாமல் போனவிடயம் தெரிய வந்தது.
இதேவேளை, 28-12-2007 அன்று இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்பகுதியில் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேரின் சடலங்கள் கரை ஒதுங்கியதாகவும் , அழுகிப்போன நிலையில் இருந்த அச்சடலங்கள் எல். ரி. ரி. யினரது சடலங்களாக இருக்கலாம் என கருதி அதிகாரிகள் அவற்றை புதைக்க நடவடிக்கை எடுத்ததாகவும், உலக மீனவ மக்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஹேர்மன் குமார மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து தெரிய வருகிறது. ஆயினும் இச்சடலங்கள் நீர்கொழும்பு மீனவர்களது சடலங்களா என்பதை உறுதிப்படுத்திக் கூறமுடியாதென ஹேர்மன் குமார தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவில் சலெம் என்ற பிரதேசத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள கேபள் தொலைக்காட்சி சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Wednesday, January 16, 2008

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரினால் வறிய மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள்





நீர்கொழும்பு மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவரினால் (ஐக்கிய தேசியக் கட்சி) வறிய மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்களும் அப்பியாசக் கொப்பிகளும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வு 30-12-2007 அன்று நீர்கொழும்பு தலாதூவ பிரதேசத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடாவும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா கலந்து கொண்டார்.
அங்கு 250 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான பிரதீப் பீரிஸ், கெலிசன் ஜயகொடி உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தின் பிராந்தியக் கண்காட்சி நீர்கொழும்பில்





இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தின் பிராந்தியக் கண்காட்சி 5-1-2008 முதல் 7-1-2008 வரை நீர்கொழும்பு மாநகர சபை வளவில் நடை பெற்றது.
சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன கண்காட்சியை திறந்து வைத்தார்.
கண்காட்சி திறந்து வைக்கப்படுவதற்கு முன்னர் மாநகர சபை மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தின் தலைவர் ஜயந்த பெரேரா, பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன, கட்டிடக் கலைஞர் பிரசன்ன சில்வா ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் நீர்கொழும்பு மேயர் நிமல் லான்ஸா, கண்காட்சியின் ஒழுங்கமைப்புக் குழு இணைத் தலைவர்களான கட்டிடக் கலைஞர்களான பந்துல வெலிகடாராச்சி, சுரன்ஜன் ரணசிங்க உட்பட நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பல நிறுவனங்கள் இங்கு கூடங்களை அமைத்திருந்தன. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

Tuesday, January 15, 2008

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் நீர்கொழும்பில்






இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் 22-12-2007 அன்று நீர்கொழும்பு குரணையில் உள்ள வை. எம். சி. ஏ. சர்வதேச ஹோட்டல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசியத் தலைவர் ஜகத் அபேசிங்க , தேசிய சிரேஷ்ட உப தலைவர் பாரத ஜொனிக் ஹேவ , பணிப்பாளர் நாயகம் எருவில் நாணயக்கார, தேசிய செயலாளர் நிமால் குமார் உட்பட மேலும் பல அதிகாரிகளும் , வடக்கு-கிழக்கு உட்பட சகல மாவட்டங்களிலும் இருந்து வருகை தந்த 250 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இம்முறை சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டத்தை கம்பஹா மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, January 8, 2008

கிளேமோர் தாக்குதலில் அமைச்சர் தசநாயக்க பலி








கிளேமோர் தாக்குதலில் தேசத்தை கட்டி எழுப்பும் அமைச்சர் தசநாயக்க பலியானார்.
நீர்கொழும்பு- கொழும்பு பிரதான வீதியில் ஜாஎல ருக்மணி தேவி சிலைக்கருகில் காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் கிளேமோர் குண்டு தாக்குதலில் சிக்கி அமைச்சர் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் 8-1-2008 அன்று காலை 10.35 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
அமைச்சர் தசநாயக்கா புத்தளத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் நடந்துள்ளது.
இறக்கும் போது அமைச்சரின் வயது 54 ஆகும். இச்சம்பவத்தில் மேலும் சிலர் பலியாகியுள்ளனர்.
அமைச்சர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்போது சிகிச்சை பலனின்றி மரனமானார்.

இச்சம்பவத்தில் வாகனங்கள் பலவற்றுக்கு சேதம் ஏற்படடுள்ளது.

Monday, January 7, 2008






நீர்கொழும்பு நகரம் மீன்பிடித் தொழிற் துறைக்கும் உல்லாசப் பயணத் தொழிற் துறைக்கும் பிரசித்தமான பெற்ற நகரமாகும்.
இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் இவ்விரு தொழில் துறைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அவை தொடர்பாக என்னால் எடுக்கப்பட்ட நிழற் படங்களை இங்கு காணலாம்.